http://thebattleforsanskrit.com/synopsis/
சமஸ்கிருதத்திற்கானப்போர்
ராஜிவ் மல்ஹோத்ரா
சுருக்கம்
பாரத நாட்டைப்பற்றி மேற்கத்திய நாடுகளில் கட்டமைக்கப்பட்டுவரும் தவறான சித்தரிப்பை கேள்விக்குட்படுத்த புதியதொரு விழிப்புணர்வு தோன்றியுள்ளது. சமீபத்தில் வெளியான ஸ்ரீ ராஜிவ் மல்ஹோத்ரா அவர்களின் சமஸ்கிருதத்திற்கானப்போர் என்னும் நூல் பண்பாடு, சமூகம், அரசியல் தளங்களில் பாரதத்தைப்பற்றிய பிம்பத்தை கட்டமைப்பதில் ஆதிக்கம் செலுத்திவரும் அமெரிக்க சிந்தனைப்பள்ளி ஒன்றைப்பற்றிய தெளிவை மரபார்ந்த சமஸ்கிருதம் மற்றும் பாரதப்பண்பாடு நாகரிகம் ஆகியதுறை அறிஞர்களிடையே தோற்றுவிக்க முயல்கிறது.
இந்தியவியல் என்றும் சமஸ்கிருத ஆராய்ச்சி இயல் என்றும் இந்த உயர்கல்வித்துறை அழைக்கப்படுகிறது. சமஸ்கிருத நூல்களை ஆராய்ச்சி செய்த இந்த இந்தியவியலாளர்கள் அந்த நூல்களில் விஷம் நிறைந்துள்ளதாகக் கூறிக்கொண்டு தற்கால இந்திய சமூகத்தின் உள்விவகாரங்களில் தலையிடமுயல்கின்றனர். சமஸ்கிருத நூல்கள் பலவும் சமூகஒடுக்குதலை அடக்குமுறையை உள்ளீடாகக் கொண்டுள்ளதாகவும் ஆளும் வர்கத்தின் அரசியல் ஆதிக்கத்தினை நிலை நிறுத்துவதற்கானக் ஆயுதமாக செயல்படுத்தப்படுதாகவும் அவர்கள் சொல்லுகிறார்கள்.
மேலும் சமஸ்கிருத நூல்கள் வலியுறுத்தும் பாரமார்த்திக ஆன்மிகக் கருத்துக்கள் நிராகரிக்கப்படவேண்டும், ஒதுக்கித் தள்ளப்படவேண்டும் என்பதும் அவர்களது நிலைப்பாடாகும். சமஸ்கிருதம் எப்போதோ செத்துப்போனமொழி என்பதும் இவர்கள் வாதமாகும். இவற்றையெல்லாம் மரபார்ந்த சமஸ்கிருத அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் இந்தக்கருத்துக்களை முழுமையாக நிராகரிக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். .
ஸ்ரீ ராஜிவ் மல்ஹோத்ரா அவர்களின் மேற்கத்திய இந்தியவியலில் நோக்கம் என்ன? அதில் உள்ள அபத்தங்கள் பாதகங்கள் என்னென்ன? என்றக் கேள்விகளுக்கான தீவிர தேடலும், பாரம்பரிய இந்திய அணுகுமுறையைப் பாதுகாக்கும் அவரது முழுமுயற்சியும் ஹிந்துக்களின் பழம்பெரும் புனித நிறுவனங்களுள் ஒன்றான ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் ஆராய்ச்சி நிதியுதவித் திட்டத்தினைப்பற்றிய அவரது ஆய்வில் இருந்து துவங்கின. ஸ்ரீ சிருங்கேரி சாரதாபீடத்தின் போதனைகள் தவறாக திரித்துப்பொருள் கொள்ளப்படுவதற்கான அபாயம் இருப்பதாக அவர் உணர்ந்தார். சனாதன தர்மத்தின் ஒட்டுமொத்த பாரமார்த்திக சிந்தனைகளும் தவறாக சித்தரிக்கப்படுவதற்கும் இத்தகைய அபாயம் இருப்பதாக அவர் கருதினார்.
மேற்கத்திய இந்தியவியல் தரப்பு(பிறத்தியார் நோக்கு), பாரதிய பாரம்பரிய அணுகுமுறை(அகத்தவர் நோக்கு), இவற்றில் எந்த ஒரு பக்கத்துக்கு ஆதரவாக ஒருவர் இருந்தாலும் சரி, அவருக்கு சமஸ்கிருதத்திற்கானப் போர் என்ற இந்த நூல் ஒரு அறிவார்ந்த விவாதத்தினை ஆழ்ந்த ஆய்வு முடிவுகளோடு புதியப் புரிதல்களோடு முன்வைக்கிறது. இன்றைய உலகளாவிய சூழலில், ஒரு மிகமுக்கியமான அறிவுத்துறையில் விளங்கும் இரு ஆராய்ச்சி அணுகுமுறைகளைப்பற்றிய மிகுந்தபயனுள்ள நூல் இது. இந்த இரு ஆய்வியல் அணுகுமுறைகளும் முற்றிலும் தம்முள் மாறுபட்டனவையா? வேறானவையா? இல்லை இவை இரண்டையும் இணைப்பது சாத்தியமா? என்பதையெல்லாம் இந்த நூலை ஆழ்ந்துபடிப்பவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்.
Translated by: Dr. Kanagaraj Easwaran